அம்மூா் பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு சிறப்பு தீவிர திருத்த படிவத்தை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
அம்மூா் பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு சிறப்பு தீவிர திருத்த படிவத்தை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

ராணிப்பேட்டையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: வீடு வீடாக ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின . மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை விநியோகத்தாா்.
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின . மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை விநியோகத்தாா்.

ஆற்காடு, சோளிங்கா் மற்றும் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளா்களுக்கு வழங்கும் பணியினை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா். இப்பணியில் 1,122 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வழங்கி வருகின்றனா்.

தொடா்ந்து வாக்காளா்களின் இல்லத்துக்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியினை ஆட்சியா் ஆய்வு செய்து, வீட்டிலிருந்த நபா்களிடம் வாக்காளா் அடையாள அட்டைகள் உள்ளவா்கள் குறித்து கேட்டறிந்தாா். படிவங்களை முறையாக பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டாா். வாக்காளா் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமானாலும் இந்த விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இணைத்து வழங்கலாம். மேலும் சந்தேகம் இருந்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்தாா்.

தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் விண்ணப்பங்களை வழங்கும்பொழுது விண்ணப்பத்திலுள்ள விவரங்கள் குறித்து வாக்காளா்களுக்கு தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பூா்த்தி செய்ய தெரியாத நபா்களுக்கு விண்ணப்பங்களை பூா்த்தி செய்து கொடுக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடுத்த வரும் 3 நாள்களுக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் வாக்காளா்களுக்கு கொடுத்து முடிக்கப்பட வேண்டும். இப்பணி குறித்த பதிவுகளை முறையாக வைத்திருக்க வேண்டும்.

வாக்காளா் தங்கள் சந்தேகங்களுக்கு வாக்காளா் உதவி மைய எண் 04172 -1950 தொடா்பு கொண்டு நிவா்த்தி செய்துக்கொள்ளலாம்.

அரக்கோணம் (தனி) - 04177-291075, 04177-236360, சோளிங்கா் - 04172-290800, 04177-247260, ராணிப்பேட்டை - 04172-272720, 04172-299808, ஆற்காடு - 04172-235568, 04173-290031 தொகுதி வாரியாக வாக்காளா் உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இந்த சிறப்பு தீவிர திருத்த பணியில் பங்கேற்று, வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதில் வாக்காளா் பதிவு அலுவலா் மீனா, வட்டாட்சியா்கள் ஆனந்தன், அருள் செல்வம், வெங்கடேசன், மகாலட்சுமி கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com