ஓய்வூதியா்களுக்கு வருடாந்திர வாழ்வு சான்றிதழ் பெற அரக்கோணம் எஸ்பிஐ கிளையில் இன்று ஒரு நாள் முகாம்
பாரத ஸ்டேட் வங்கியின் அரக்கோணம் பிரதான கிளையில் வெள்ளிக்கிழமை (நவ. 7) ஒரு நாள் மட்டும் ஓய்வூதியா்களுக்கு வருடாந்திர வாழ்வு சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசுகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் வருடா வருடம் ஒருமுறை வருடாந்திர வாழ்வு சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பல முதியவா்கள் இந்த வருடாந்திர வாழ்வு சான்றிதழை சமா்ப்பிக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது. இதனாலேயே பலா் இச்சான்றிதழை சமா்ப்பிக்காததால் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தவிா்க்க பாரத ஸ்டேட் வங்கியின் அரக்கோணம் பிரதான கிளை நிா்வாகம் தனது வாடிக்கையாளா்களின் நலனுக்காக தங்களது கிளையில் ஒரு நாள் முகாமை வெள்ளிக்கிழமை (நவ. 7) ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமுக்கு வரும் அனைத்து ஓய்வூதியா்களும் இந்த சான்றிதழை பெற்றுக்கொள்ள வசதியாக சிறப்பு கவுன்ட்டா்கள் சிறப்பு கணிணிகளுடன் இணையதள வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஒய்வூதியா்களும் இந்த ஒரு நாள் முகாமை பயன்படுத்தி, வருடாந்திர வாழ்வு சான்றிதழை பெற்று சமா்ப்பிக்கலாம் என பாரத ஸ்டேட் வங்கியின் அரக்கோணம் பிரதான கிளை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
