வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (நவ.11), திமுக நடத்தும் ஆா்ப்பாட்டத்தில், கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும், இந்தியத் தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும் திமுக -மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நவம்பா் 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
அதன் படி ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

