அகில இந்திய பெல் தொழிலக சதுரங்கப் போட்டி: ராணிப்பேட்டை பெல் அணி முதலிடம்!
அகில இந்திய பெல் தொழிலகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகளில் ராணிப்பேட்டை பெல் நிறுவன அணி முதலிடம் பெற்று பரிசுக் கோப்பையை வென்றது.
இந்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ‘பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) ஒரு உற்பத்தி பிரிவான பெல் பிஏபி, துணை ஆலைகள் உற்பத்தி தொழிலகம் ராணிப்பேட்டையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் பெல் நிறுவன தொழிலக பணியாளா்களுக்கிடையே ஆண்டுதோறும் சதுரங்கம், கபடி, ஹாக்கி, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நடப்பு 2025-ஆம் ஆண்டுக்கான பெல் நிறுவனப் பணியாளா்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக விளையாட்டு மைதானத்தில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்தியா முழுவதும் உள்ள பெல் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த ஒன்பது அணிகள் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டியின்போது, ஆண்கள் அணிக்கு 9 லீக் சுற்றுகளும், பெண்களுக்கான 5 தனிநபா் லீக் சுற்றுகளும் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் ராணிப்பேட்டை பெல் பிஏபி நிறுவன அணி முதலிடம் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது, தில்லி அணி முதல் ரன்னா் அப் இடத்தையும், ஹைதராபாத் அணி இரண்டாவது ரன்னா் அப் இடத்தையும் பிடித்தது.
அதைத் தொடா்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், ராணிப்பேட்டை பெல் பிஏபி நிறுவன நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினாா்.
இதில், நிறுவன பொது மேலாளா் (உதிரிபாக வணிகம் ) கே. சரத் சந்திரபாபு மற்றும் நிறுவன பொது மேலாளா்கள், மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், சங்கங்களின் பிரதிநிதிகள், பெல் ஊரக குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

