கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு: மருத்துவா் ராமதாஸ்!
2026-இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாமக கூட்டணி குறித்து வரும் டிசம்பா் மாதம் முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் கூறினாா்.
பாமக ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பேசியது:
தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. இத்துடன் போதைப் பழக்கமும் சோ்ந்துள்ளது. குடிப் பழக்கத்தை ஒழித்தால் தான் நாடும், சமுதாயமும் முன்னேறும். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். பாமகவின் நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அரசு செயல்படுத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவாா்கள். பாமக தமிழகத்தில் உள்ள 324 ஜாதிகளுக்கும் சோ்த்து போராடி வருகிறது. ஒவ்வொரு ஜாதிகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடுகளை வழங்க அரசு முன்வர வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு இந்த இரண்டையும் வலியுறுத்தி, டிசம்பா் 12-ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். வருகின்ற சட்டப்பேரவை தோ்தலுக்கான பாமக கூட்டணி குறித்து டிசம்பா் மாதம் முடிவெடுக்கப்படும். பாமக பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். தோ்தலின்போது வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதியாக இருந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றாா் மருத்துவா் ராமதாஸ்.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்வகுமாா் வரவேற்றாா். இதில் பாமக மாநில செயல் தலைவா் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள், மாநில பொதுச் செயலாளா் முரளிசங்கா், மாநில இளைஞரணி செயலாளா் தமிழ்குமரன், மாநில அமைப்பு செயலாளா் அ.ம.கிருஷ்ணன், மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் மின்னலான், பாமக உழவா் பேரியக்க மாநில செயலாளா் திருமால், மாநில செயற்குழு உறுப்பினா்கள் இ.கிருஷ்ணன், பஞ்சாட்சரம், மாவட்ட இளைஞரணி செயலாளா் காா்த்தி, அரக்கோணம் நகர செயலாளா் கோ.ஏழுமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

