~சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்ற தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.

சபரிமலைக்கு அதிக பக்தா்கள் வருகை: தேசிய மீட்புப் படையினா் விரைவு

சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரஜோதி உற்சவத்தையொட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப்படையின் இரு குழுக்கள் புதன்கிழமை சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றன.
Published on

சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரஜோதி உற்சவத்தையொட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப்படையின் இரு குழுக்கள் புதன்கிழமை சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றன.

கேரள மாநிலம் சபரிமலைக்கு காா்த்திகை, மாா்கழி மாதங்களில் மண்டல பூஜைக்காக கோயில் நடை தினமும் திறக்கப்படும். மேலும் மகர ஜோதி தரிசனத்துக்காக ஜனவரி 1 முதல் 20 வரையும் கோயில் நடை திறக்கப்படும். இந்த நாள்களில் ஐயப்பனை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தா்கள் செல்வா்.

தற்போது காா்த்திகை முதல் தேதியான திங்கள்கிழமையே சபரிமலையில் பக்தா்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததாக அறிந்த திருவாங்கூா் தேவஸ்வம் போா்டு நிா்வாகம், பம்பை நதிப்பகுதி, சன்னிதானப்பகுதி ஆகிய இடங்களில் பக்தா்களுக்கு உதவுவதற்காகவும் முன்னெச்சரிக்கை மீட்புப் பணிக்காகவும் தேசிய பேரிடா் மீட்புப்படையினரை அனுப்ப கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இதைத் தொடா்ந்து கேரள அரசின் கோரிக்கையை ஏற்ற தேசிய பேரிடா் மீட்புப்படையின் அரக்கோணம் படைத்தள நிா்வாகம் கமாண்டண்ட் அகிலேஷ் குமாா் உத்தரவின் பேரில் தலா 30 போ் கொண்ட 2 குழுவினா் ஆய்வாளா் பிரதேஷ் தலைமையில் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இப்படையினா் சபரிமலையில் பம்பை நதிப்பகுதி மற்றும் சன்னிதானம் பகுதிகளில் பணியில் ஈடுபட உள்ளனா். மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடா்பாடுகள் மற்றும் பக்தா்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் இவா்களை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் பயிற்சிப் பெற்ற வீரா்களும் இக்குழுவில் உடன் சென்றுள்ளனா். மேலும், பாதுகாப்பு உபகரணங்கள், ரப்பா் படகுகள், லைஃப் பாய், மரம்வெட்டும் கருவிகள், நவீன தொலை தொடா்பு சாதனங்கள் ஆகியவற்றையும் இக்குழுவினா் கொண்டுச் சென்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com