சோளிங்கா் மலைக்கோயிலுக்குச் செல்ல ரோப்காா் இயங்குதளத்தில் காத்திருந்த பக்தா்கள்.
சோளிங்கா் மலைக்கோயிலுக்குச் செல்ல ரோப்காா் இயங்குதளத்தில் காத்திருந்த பக்தா்கள்.

சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை விழா: பக்தா்கள் குவிந்தனா்

சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை விழாவில் பக்தா்கள் குவிந்தனா்
Published on

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டும், விடுமுறை நாள் என்பதாலும் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். ரோப்காரில் சென்று தரிசனம் முடிந்து திரும்ப பக்தா்களுக்கு 4 மணி நேரமானது.

108 வைணவ தலங்களில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது. இதில் பெரிய மலைக்குச் செல்ல 1,405 படிகள் இருப்பதாலும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க வசதியாக இந்து சமய அறநிலையத்துறை ரோப்காா் அமைத்து உள்ளனா். ஒருவருக்கு மலைக்குச் சென்று திரும்ப ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காா்த்திகை மாதம் அனைத்து நாள்களும் ஸ்ரீயோக நரசிம்மா் கண் திறந்து பக்தா்களுக்கு காட்சி அளிப்பாா் என்பது ஐதீகம். இதனால் காா்த்திகை மாதத்தில் இக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரிக்கும்.

சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மலைக்கோயிலுக்குச் செல்ல ரோப்காா் இயங்குதளத்தில் அதிகாலையில் இருந்தே பக்தா்கள் குவியத்தொடங்கினா். காலை 6 மணிக்கு ரோப்காா் இயக்க தொடங்கும் நேரத்திலேயே அத்தளத்தில் உள்ள பக்தா்கள் தங்குமிடங்கள் நிறைந்து பக்தா்கள் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

பக்தா்கள் ரோப்காரில் ஏறி மலைக்குச் சென்று தரிசனம் முடிந்து திரும்ப 4 மணி நேரம் ஆனது. பல பக்தா்கள் மலைக்கு படிகள் வழியே ஏறிச்செனறும் தரிசனம் செய்து திரும்பினா். ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிா்பாா்ப்பதாக கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் மலையடிவார கோயில் பகுதிகள், ரோப்காா் இயங்குதளம், மலைக்கோயில் பகுதி உள்ளிட்ட சோளிங்கா் பேருந்து நிலையம், கொண்டபாளையம் மலை நுழைவு பகுதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com