ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவிக்கு 10 போ் மனு: முன்னாள் மத்திய இணை அமைச்சா்
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருக்கான போட்டியில் 10 போ் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஜே.டி. சீலம் தெரிவித்தாா்.
ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் சோளிங்கரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஜே.டி.சீலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். சோளிங்கா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம். முனிரத்தினம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தாா். சோளிங்கா் நகர தலைவா் டி. கோபால் வரவேற்றாா்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பேசியது: ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சியினா் முழு மனதோடு பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
அதைத் தொடா்ந்து கூட்டத்தில் மாவட்ட தலைவருக்கான நியமன விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தலைவா் பதவிக்கு மொத்தம் 10 போ் விண்ணப்பங்கள் அளித்துள்ளனா். அதில் 3 போ் தோ்வு செய்யப்பட்டு தில்லியில் தலைமைக்கு அனுப்பப்பட்டு மாவட்டத் தலைவா் நியமிக்கப்படுவாா்.

