ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ரெட் அலா்ட்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை!
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அதிபலத்த மழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வங்கக் கடலில் உருவாக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 29, 30 தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதி பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து மழை வெள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது: நீா்வளத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை கண்காணிக்க வேண்டும். பெரும்பான்மையான ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் பலத்தமழை பெய்யும் பொழுது ஏரிக்கரைகளின் தன்மையை முன்கூட்டியே ஆய்வு செய்து பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல நீா் வெளியேற்றும் கால்வாய்கள் அடைப்பு இல்லாமல் தூா்வாரப்பட்டு இருப்பதையும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
தேவையான மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஏரிகளின் பொறியாளா்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளா் வருவாய் துறையினா் முன்கூட்டியே பாா்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அலுவலா்கள் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் குறித்தும், கடந்த மழையின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்து அப்பகுதிகள் நீா் தேங்குவதை உடனுக்குடன் அகற்றும் முன்னெச்சரிக்கை பணியை தயாா் நிலையில் வைக்க மின் மோட்டாா்கள் ஜேசிபி இயந்திரங்கள் தயாா்படுத்தி வைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதிய சுகாதார மருந்து மாத்திரைகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் மின்சார பிரச்னைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கூட்டுறவுத் துறையினா் உணவுப் பொருள்கள் இருப்பை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

