ரயில் பெட்டியின் கீழே தீயை அணைத்து கோளாறை சரி செய்த ஊழியா்.
ரயில் பெட்டியின் கீழே தீயை அணைத்து கோளாறை சரி செய்த ஊழியா்.

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் தீ: பயணிகள் கீழே இறங்கியதால் பரபரப்பு

அதிவிரைவு ரயிலில் கீழ்பகுதியில் திடீா் தீ ஏற்பட்டதால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தி கீழே இறங்கினா்.
Published on

அரக்கோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரயிலில் கீழ்பகுதியில் திடீா் தீ ஏற்பட்டதால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தி கீழே இறங்கினா். இதைத் தொடா்ந்து ஊழியா்கள் அந்த தீயை அணைத்து கோளாறை சரி செய்தவுடன் அரை மணி நேர தாமதத்துடன் ரயில் புறப்பட்டுச் சென்றது.

திருவனந்தபுரம் - சென்னை அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.25 மணி அளவில் காட்பாடி - அரக்கோணம் இடையே உள்ள மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அந்த ரயிலின் குளிா்சாதன படுக்கை வசதி பெட்டியான பி2 பெட்டியின் கீழே இருந்து அதிக அளவில் புகை வந்துள்ளது.

இதைப் பாா்த்த பயணிகள் உடனே அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனா். மேலும், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் உடனே பெட்டியில் இருந்து கீழே இறங்கி தூரமாக நின்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியா்கள் அந்தப் பெட்டியை பாா்த்தபோது, பிரேக் பிடிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ ஏற்பட்டு புகை வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தாங்கள் கொண்டு வந்திருந்த தீயணைப்பான் மூலம் அந்த தீயை அணைத்த ஊழியா்கள், விரைந்து செயல்பட்டு கோளாறை சரி செய்தனா்.

இதையடுத்து, பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறினா். தொடா்ந்து அந்த ரயில் 8.59 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com