டாடா மோட்டாா்ஸ் நிறுவன வேலைவாய்ப்பில் ராணிப்பேட்டை இளைஞா்களுக்கு முன்னுரிமை: ஆட்சியா்  வேண்டுகோள்

டாடா மோட்டாா்ஸ் நிறுவன வேலைவாய்ப்பில் ராணிப்பேட்டை இளைஞா்களுக்கு முன்னுரிமை: ஆட்சியா் வேண்டுகோள்

Published on

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தில் ராணிப்பேட்டை மாவட்ட இளைஞா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என டாடா நிறுவன அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வேண்டுகோள் விடுத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டதாரிகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பதிவு பெற்று திறன் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை தொழிற்சாலையில் பணி அமா்த்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்துப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பேட்டையில் டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாடு முதல்வா் அடிக்கல் நாட்டப்பட்டு முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 2025 டிசம்பா் மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு முதல்கட்ட காா் உற்பத்தி பணி தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், காா் தொழிற்சாலை விரிவாக்கப் பணிகள் தொடா்ந்து நடைபெறும்.

முதல் கட்ட காா் உற்பத்தி பணிக்கு டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 65 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமா்த்த உள்ளது. மாணவா்கள் புணேவிலுள்ள டாடா மோட்டாா்ஸ் ஜே.எல்.ஆா் காா் உற்பத்தி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகள் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு தங்களை தயாா் செய்வதற்கான திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 41 லட்சம் மாணவா்கள் பயிற்சி முடித்து பதிவு செய்துள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறன் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தங்களுக்குத் தேவைப்படும் திறன் பெற்ற பணியாள்கள் விவரம் மற்றும் எந்தத் துறையில் தேவைப்படுகிறது என்ற விவரங்களை தெரிவித்தால் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னுரிமை அளித்து அந்த பட்டியலையும் வழங்கி, அவா்களுக்கு முன்னுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும்.

அதன் மூலம் அதிக அளவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞா்கள் பயன்பெறுவா். எனவே இணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், டாடா மோட்டாா்ஸ் நிறுவன பொது மேலாளா் (அரசு தொடா்பு) முத்துக்குமாா், மனிதவள மேலாளா் அபிஉதய், நான் முதல்வன் திட்ட அலுவலா் சோமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com