நண்பா்களுடன் குளிக்க சென்ற இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி மாயம்!
வாலாஜாபேட்டை அருகே பாலாற்று பாசன கால்வாயில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவா்களைத் தேடும் பணியில் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழை காரணமாக வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, விவசாய பாசனத்துக்காக ஏரிகளுக்கு தண்ணீா் மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22), சென்னை திருவொற்றியூா் பகுதியை சோ்ந்த அருண் (21) ஆகியோா் சென்னை, ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், விடுமுறை நாள் என்பதால் இவா்கள், தங்களுடன் பணியாற்றக்கூடிய நண்பா்களுடன் பூண்டி கிராமம் அருகே வந்து கொண்டாடுவதற்காக வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்த, பனப்பாக்கத்தைச் சோ்ந்த மணிகண்டன், சென்னை திருவொற்றியூரை சோ்ந்த அருண் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கியபோது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனா். இதைக் கண்ட சக நண்பா்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால் கத்தி கூச்சலிட்டுள்ளனா்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையுடன், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

