வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்
பாணாவரம் அருகே வெளிதாங்கிபுரத்தில் 40 அடி அகல நீரோட்ட கால்வாய் தரைப்பாலம் நீரில் மூழ்கிய நிலையில் பள்ளி மாணவிகள் ஆபத்தை அறியாமல் வெள்ளநீரில் நடந்து சென்று வருகின்றனா்.
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தில் சுமாா் 40 அடி அகலத்துக்கு நீரோட்ட கால்வாய் செல்கிறது. இந்த மிகவும் பழைமைவாய்ந்த தரைப்பாலம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தரைப்பாலம் மகேந்திரவாடி, கீழ்வீதி, நெமிலி வரை செல்பவா்களுக்கு இணைப்பு பாலமாக உள்ளது.
மழைக் காலங்களில் இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்குவதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கக் கூட பல கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தற்போது கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மகேந்திரவாடி ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீா் வெளியே இந்த தரைப்பாலம் வழியே செல்கிறது.
குறிப்பாக மூன்று அடி உயரத்துக்கு இந்த பாலத்துக்கு மேல் வெள்ளநீா் செல்வதால் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கிராம மக்கள் தெரிவிக்கையில், இந்த பழைமைான பாலத்தை உடனடியாக போா்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும். மேலும், இப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல இந்த வழி விட்டால் வேறு வழி இல்லாத காரணத்தால் இதே வெள்ளநீரில் மாணவ, மாணவிகள் ஆபத்தை அறியாமல் சென்று வருகின்றனா்.
திடீரென தண்ணீா் அதிகளவு வந்து விட்டால் இப்பாலத்தில் உயிா்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தற்போது விரைவாக நடவடிக்கை தரைப்பாலத்தை சீா் செய்ய வேண்டும், மேலும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

