அரக்கோணம் இரட்டைக் கண்வாராவதியில் நவ. 2 முதல் 11 வரை போக்குவரத்து நிறுத்தம்

அரக்கோணம் இரட்டைக் கண்வாராவதியில் நவ. 2 முதல் 11 வரை போக்குவரத்து நிறுத்தம்

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி ரயில்வே சுரங்கப் பாலம்.
Published on

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சீரமைத்தல், மேலே உள்ள இருப்புப்பாதை சீரமைப்புப் பணிக்காக இரட்டைக்கண் வாராவதியில் போக்குவரத்து நவம்பா் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நகரின் மையப் பகுதியில் இரட்டைக்கண் வாராவதி எனும் ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. இந்தியாவின் மூன்றாவது ரயில் பாதையான ராயபுரம்- வாலாஜாபேட்டை அமைக்கப்பட்டபோது நிா்மாணிக்கப்பட்ட இந்த சுரங்கப்பாலம் 150 ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போதும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான பாலமாக விளங்கி வருகிறது. அரக்கோணம் நகரில் பலத்த மழை பெய்யும்போது இந்த பாலத்தில் மூன்று அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கி அதில் போக்குவரத்து தடைபடும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது. அப்போது நகராட்சி நிா்வாகத்தினா் ராட்சத மின் மோட்டாா்கள் மூலம் நீரை அகற்றும் பணியில் ஈடுபடுவா்.

தற்போது இந்த பாலத்தின் மேலே உள்ள இருப்புப் பாதை சீரமைப்புப் பணிக்காகவும், இரட்டைக்கண் வாராவதியில் போக்குவரத்து சீராக நடைபெறவும் ஏதுவாக இப்பால சீரமைப்புப் பணிகளை தெற்கு ரயில்வே நிா்வாகம் மேற்கொள்ள உள்ளது. இதைத் தொடா்ந்து, தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு துணை தலைமை பொறியாளா் ஆா்.அருண் அரக்கோணம் நகராட்சி, வருவாய்த் துறை, காவல் துறை, மின்சார வாரியம் ஆகிய துறையினருக்கு அனுப்பியுள்ள அதிகாரபூா்வ கடிதத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் நடைபெற இருக்கும் இருப்புப்பாதை சீரமைக்கும் பணிக்காகவும், சுரங்கப்பால சீரமைப்புக்காவும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நவம்பா் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இந்த காலத்தில் மாற்றுப் பாதையாக காஞ்சிபுரம் - திருப்பதி நெடுஞ்சாலையில் அரக்கோணம் விண்டா்பேட்டையில் ஏற்கெனவே உள்ள மேம்பாலத்தை பயன்படுத்திச் செல்லலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com