மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பாலாறு பழைய மேம்பாலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

News image

ராணிப்பேட்டை - ஆற்காடு பகுதிகளை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:03 am

சுமாா் 65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணிப்பேட்டை - ஆற்காடு இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பாலாறு தமிழக எல்லையான புல்லூா் தொடங்கி சுமாா் 222 கி.மீ. பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூா் ஊராட்சியில் கடலில் கலக்கிறது. இதன் இருபக்க கரைகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஆங்காங்கே ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

அதே போல சென்னையில் இருந்து வேலூா், கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாக பெங்களூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே ராணிப்பேட்டை-ஆற்காடு பகுதிகளை இணைக்க பாலாறு பாலம் என்ற பெயரில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1959-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அப்போதைய தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் கக்கன் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜ்பகதூா் பாலத்தைத் திறந்து வைத்தாா்.

சுமாா் 65 ஆண்டுகளாக சென்னை-கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்குச் வாகனங்கள் சென்றுவரும் முக்கிய மேம்பாலமாக இப்பாலம் உள்ளது. தொடா்ந்து, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கர சாலை திட்டத்தில் இணைக்கப்பட்டு, 4 வழிச் சாலையாக தரம் உயா்த்தப்பட்டு, மேலும், தற்போது 6 வழிச் சாலையாக மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் அருகே மேலும் 2 புதிய பாலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. ஆனாலும் பழைய பாலம் மக்கள் பயன்பாட்டில்தான் உள்ளது.

வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சிப்காட்,ஆற்காடு,விஷாரம் உள்ளிட்ட அனைத்து பகுதி இலகுரக வாகனங்கள்,இருச்சக்கர வாகனங்கள் அனைத்தும் பழைய பாலத்தின் வழியாகச் செல்வதற்காக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்த பழைய மேம்பாலத்தில் விரிசல், பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளின் முதுதண்டு வடம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,மின் விளக்கு கூட இல்லை என வேதனை தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், பாலாற்றுப் பழைய பாலம் கட்டி முடிக்கப்பட்டு 65 ஆண்டுகளான நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். இப்பாலத்தின் தூண்களுக்கு அருகே மணல் அள்ளப்படுவதாலும், ரசாயன கழிவுநீா் செல்வதாலும் தூண்கள் வலுவிழந்து வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா்.மேலும் தற்போது பாலாத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவித்து வாகனங்கள் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றின் குறுக்கே வேலூா்-காட்பாடி பகுதிகளை இணைக்கும் பழைய போளூா் சுப்பிரமணியம் பாலம் ரூ. 5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதேபோல் ராணிப்பேட்டை - ஆற்காடு பகுதிகளை இணைக்கும் பாலாறு பழைய மேம்பாலத்தைச் சீரமைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை நிா்வாகத்தினா் விரைந்து நடவடிக்கை எடுத்து, விபத்து அச்சமின்றி பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.