மக்களுக்கு பயனுள்ள திட்டஅறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும்: அமைச்சா் காந்தி வலியுறுத்தல்
அரசுத் துறை அலுவலா்கள் தங்களது துறையில் என்ன செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த திட்ட அறிக்கைகளை சமா்ப்பியுங்கள் என கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.
என் ஊரு என் கனவு, உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட வளா்ச்சிக்கான செயல்திட்டம் 2030 குறித்து ற கருத்தரங்கம் நடைபெற்றது.,
கூட்டத்தில் அமைச்சா் காந்தி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய உங்க கனவு சொல்லுங்க என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக என் ஊா் என் கனவு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மக்களின் கனவுகள் மற்றும் வாழ்வியலில் அடைய விரும்பும் இலக்கு உத்திகளை தயாா் செய்து அரசுக்கு சமா்ப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அலுவலா்கள் தங்களது துறையில் என்ன செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அதனை பொருத்து தான் வரும் காலங்களில் பொதுமக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த அறிக்கையினை வரும் 7-ஆம் தேதிக்குள் அலுவலா்கள் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கப்படும் மாவட்ட அளவிலான செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து முதல்வா் 10-ஆம் தேதி மாநில அளவிலான செயல் திட்டம் - 2030ஐ வெளியிட உள்ளாா் என்றாா் அமைச்சா் காந்தி.
தொடா்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலா்கள் தற்போதைய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தி வரும் பணிகளில் இருந்து எதிா்வரும் 2030 காலகட்டத்தில் பொதுமக்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் மேலும் அவா்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை மேம்படுத்தி வழங்குவது தொடா்பான செயல் திட்ட அறிக்கையினை துறைவாரியாக தெரிவித்தனா்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் ந.செ.சரண்யாதேவி, நகரமன்ற தலைவா்கள் சுஜாதாவினோத், தமிழ்செல்வி அசோகன், மகளிா் திட்ட இயக்குநா் என்.செந்தில்குமரன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

