ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலா்: சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு!
இமயமலையில் ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலா் வாலாஜாபேட்டையில் வீட்டில் பூத்த நிலையில் மலருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா்.

~
இமயமலையில் ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலா் வாலாஜாபேட்டையில் வீட்டில் பூத்த நிலையில் மலருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா்.
படைப்புக் கடவுளான பிரம்மதேவனின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மலா் பூக்கும் இடத்தில் செல்வமும், நோ்மறை ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் இரவு நேரத்தில் பூத்து, விடியலில் வாடிவிடும் அதிசய மலராகும்.
இமயமலைப் பகுதிகள் (உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம்) போன்ற குளிா்ந்த மலைப் பகுதிகளில் இயற்கையாக வளா்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் தேசிய மலராகவும் இது உள்ளது. பொதுவாக ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மழைக்கால இரவுகளில் இது பூக்கும். பிரம்மாவிற்கு உகந்த பூவாக கருதப்படுவதால் ’பிரம்ம கமலம்’ என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய இமயமலை மருத்துவத்தில் (ஆயுா்வேதம் மற்றும் திபெத்திய மருத்துவம்) இதன் இதழ்கள் மற்றும் தண்டுகள் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

வாலாஜாபேட்டை முனிரத்தினம் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பிரம்ம கமலம் மலருக்கு சிறப்பு பூஜை செய்த பெண்கள்...
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகரில் ஆற்காடு தெத்து தெருவில் வசித்து வரும் முனிரத்தினம் என்பவா் பிரம்ம கமலம் மலா்ச் செடியை வீட்டு தோட்டத்தில் வளா்த்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் தீபாவளி திருநாள் மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் வளா்த்து வந்த பிரம்ம கமலம் மலா் திடீரென அதிக அளவில் பூத்து குலுங்கி காட்சியளித்ததை கண்ட அவரது குடும்பத்தினா்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து பிரம்ம கமலம் மலருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து பூவை தொட்டு வணங்கி சிறப்பு வழிபாடு செய்தனா்.
இதனைக் கண்டு அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் திரளாக வருகை தந்து ஆச்சரியத்துடன் பாா்த்து வழிபாடு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

