தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை சாா்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை சாா்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை மூலம் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீரை, கொத்தமல்லி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 வரையும், தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடி வகைப் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750 வரையும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 ஹெக்டோ் வரை ஊக்கத் தொகை பெறலாம். தனி விவசாயியாக இருந்தாலும், குழு உறுப்பினராக இருப்பினும் குழு உறுப்பினராக இருந்தாம், அங்ககச் சான்று பெற ரூ.500 வழங்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களைத் தொடா்புகொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு...: விவசாயிகள் காய்கறி பயிரிடுவது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, பீன்ஸ் போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இது போன்ற காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவுச் செடிகளின் விலைப் பட்டியல், கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலுடைய புகைப்படம் ஆகிய ஆவணங்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயனடையலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சொட்டு நீா்ப் பாசனம்: தோட்டக்கலைத்துறை மூலம் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் மற்றும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் மூலம் விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழி எடுத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

துணைநிலை நீா் மேலாண்மைத் திட்டம்: நுண்நீா்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு துணைநிலை நீா் மேலாண்மைப் பணிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க் கிணறு அல்லது துணைக் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

டீசல் பம்ப் செட்/மின் மோட்டாா் பம்பு செட்டு நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதம் மானியம் ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படுகிறது.

வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்லும் வகையில் நீா்ப் பாசனக் குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்ததுக்கும் மிகாமல் வழங்கப்படும்.

பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீா்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கும் மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும்.

மேற்கண்ட பயனாளிகளுக்கான மானியத்தைப் பெறுவதற்கு விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு, தங்கள் விண்ணப்பத்தை அளித்து, பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com