வெங்கடசமுத்திரத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 30th December 2020 11:28 PM | Last Updated : 30th December 2020 11:28 PM | அ+அ அ- |

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அவ்வழியாக வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 40-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளைகளில் செங்கல் சுடுவதற்காக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உமி கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு லாரிகளில் கொண்டு வரப்படும் உமி மூட்டைகள் விதிமுறைகளுக்கு முரணாக மிக உயரமாக அடுக்கிக் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு உமி மூட்டை லாரிகள் செல்லும்போது, விநாயகபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் சாலையின் குறுக்கே செல்லும் வீட்டு மின் இணைப்புக் கம்பிகள் துண்டிக்கப்படுகின்றன. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அவ்வப்போது மின் விநியோகம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் லாரி உரிமையாளா்கள், செங்கல் சூளை உரிமையாளா்கள் உரிய தீா்வு ஏற்படுத்தாமல் அலட்சியத்துடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதிக்கு தருமபுரியில் இருந்து உமி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அதை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற உமா் ஆபாத் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அதிக மூட்டைகளை ஏற்றி வந்தால் லாரியை அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா். லாரியில் அதிக மூட்டைகளை ஏற்றி வரமாட்டோம் என அவா்கள் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு லாரியை விடுவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...