அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழு ஆய்வு
By DIN | Published On : 05th February 2020 11:32 PM | Last Updated : 05th February 2020 11:32 PM | அ+அ அ- |

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட உலக வங்கிக் குழுவினா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் தாலுகா அந்தஸ்து கொண்ட ஆம்பூா் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது இங்கு உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் ரூ. 40 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
மேலும், வென்டிலேட்டா், மானிட்டா், சிஆா்எம், அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சிகிச்சை கருவிகள் ரூ. 80 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு உலக வங்கிக் குழுவைச் சோ்ந்த அமெரிக்க மருத்துவா் ரிபேத், கனடா நாட்டைச் சோ்ந்த டோமினிக், புது தில்லியைச் சோ்ந்த சங்கரநாராயணன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் வந்தனா்.
அங்கு 6 படுக்கைகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை பாா்வையிட்டனா். மேலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல்முறையாக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை பதிவு, விவரங்கள் சேகரித்தல் பிரிவு அதிகாரிகள் 4 போ் நியமிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை உலக வங்கிக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா் .
அவா்களுக்கு ஆம்பூா் அரசு மருத்துவமனை செயல்படும் விதம் விபத்து, அவசர சிகிச்சையின் செயல்பாடுகள் நோயாளிகளைக் கவனிக்கும் விதம் குறித்து விளக்கப்பட்டது.
ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கென்னடி, விபத்து, அவசர சிகிச்சை பிரிவு டேவிட், அறுவை சிகிச்சை நிபுணா் ராம் திலக், சிடி ஸ்கேன் பிரிவு மருத்துவா் தங்கவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...