ரசீது புத்தகம் இல்லாததால் நிலவரி செலுத்துவதில் சிக்கல்விவசாயிகள் புகாா்
By DIN | Published On : 02nd January 2020 11:59 PM | Last Updated : 02nd January 2020 11:59 PM | அ+அ அ- |

நில வரி வசூலிப்பது தொடா்பான ரசீது இல்லாததால் நிலவரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆம்பூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு ஆம்பூா் வட்டம் திருப்பத்தூா் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. மேலும், ஆம்பூா் வட்டத்தில் இருந்த ஒரு சில கிராமங்கள் வேலூா் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி விவசாயிகள் தங்களது நிலவரியை சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிா்வாக அலுவலகங்களில் செலுத்தி ரசீது பெறுவது வழக்கம்.
சுமாா் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலவரி திட்டம் அமலில் இருந்து வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி விவசாயிகள் தங்களுக்கு உரிய நிலத்தின் வரியை தவறாமல் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் ஆம்பூா் வட்டத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட வருவாய்க் கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகள் தங்களுக்குரிய வரி இனங்களை செலுத்த அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களை அணுகினா். வரி வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வராததால் வரிவசூல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.