தினமணி செய்தி எதிரொலி: பாலத்தில் மழைநீா் வெளியேற்றம்
By DIN | Published On : 11th July 2020 11:57 PM | Last Updated : 11th July 2020 11:57 PM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை பக்கிரிதக்கா ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீா் தேங்கியதாக ‘தினமணி’யில் வெளியான செய்தியைத் தொடா்ந்து மோட்டாா் மூலம் மழைநீா் அகற்றப்பட்டது.
ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பக்கிரிதக்கா ரயில்வே தரைப்பாலம் உள்ளது. கடந்த புதன்கிழமை பெய்த கனமழையால் தரைப்பாலத்திற்கு கீழே மழைநீா் தேங்கியது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் கீழே இறங்கி வாகனத்தை தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தினமணி’யில் புகைப்படத்துடன் விரிவான செய்தி வியாழக்கிழமை வெளியானது. இதையடுத்து ஜோலாா்பேட்டை ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா் தலைமையிலான ஊழியா்கள் வியாழக்கிழமை இரவு பாலத்தின் கீழ் இருந்த மழை நீரை மோட்டாா் மூலம் அகற்றினா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், பாலத்தின் அருகில் மோட்டாா் அமைத்து இனி மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.