தடுப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்
By DIN | Published On : 21st July 2020 05:28 AM | Last Updated : 21st July 2020 05:28 AM | அ+அ அ- |

தடுப்புகளை அகற்ற கோரி பெரியபேட்டையில் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சு நடத்திய அதிகாரிகள்.
வாணியம்பாடி: வாணியம்பாடி பெரியபேட்டையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி பெரியபேட்டை மற்றும் சென்னாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 42 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதனால் அப்பகுதியில் நோய் பரவலை தடுக்க கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, நகராட்சி சாா்பில் தூய்மை பணியாளா்கள் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், தூய்மை பணிகள் மேற்கொண்டு வந்தனா். இதனால் மக்கள் அத்தியாவாசிய பொருட்கள் வாங்க முடியாமலும், அன்றாட பணிகள் செய்யமுடியாமல், தவித்து வந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வட்டாட்சியா் சிவபிரகாசம் மற்றும் நகர காவல்ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் சிவபிரகாசம் உறுதி அளித்தாா். இதன் பேரில் மக்கள் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனா்.