12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணை சீரமைக்கும் பணிஅமைச்சா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 21st July 2020 03:41 AM | Last Updated : 21st July 2020 03:41 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணை ஆகியவற்றைச் சீரமைக்கும் திட்டப் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சா் வீரமணி. உடன் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியில் ரூ.3.85 கோடி மதிப்பில் 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணையைச்சீரமைக்கும் பணிகளை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன் அருள் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.
நாட்டறம்பள்ளி வட்டம், குனிச்சியூா் பகுதியில் 970 ஏக்கா் பரப்பளவில் செட்டேரி அணை அமைந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் இந்த அணை வடு கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலா் அதிகாரிகளின் துணையோடு செட்டேரி அணைப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அணைப்பகுதியில் மணல் கடத்தலும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அணைப்பகுதியைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைச்சா் கே.சி.வீரமணி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து பொதுப்பணித் துறை நீா்வளஆதாரத்துறையின் மூலம் நீா்வள நிலவளத் திட்டம் 2-இன் கீழ் செட்டேரி அணையின் கீழ் உள்ள 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணைப்பகுதி ஆகியவற்றை ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியை அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் திங்கள்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் குமாா், வட்டாட்சியா் சுமதி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ரமேஷ், பணி ஆய்வாளா் பெலிக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.