வேகமாக அதிகரிக்கும் கரோனா: வேலூரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்
By DIN | Published On : 16th June 2020 02:20 AM | Last Updated : 16th June 2020 02:20 AM | அ+அ அ- |

வேலூர்: வேகமாக அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. இதன்படி, மாவட்டம் முழுவதும் மளிகை, காய்கறிக் கடைகள் அனைத்தும் இனி தினமும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மே 31-ஆம் தேதி வரை 43 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் மூன்று மடங்காக அதிகரித்து 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாநிலத்திலேயே கரோனா தொற்று அதிகமான மாவட்டங்களின் வரிசையில் வேலூரும் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூரில் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அவர் பேசியது:
வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு திடீரென உயர்வதற்கு சென்னையிலிருந்து பெரும்பாலானோர் முறையான அனுமதியின்றி வருவதும், பொது மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அரசு விதிமுறைகளை அலட்சியம் செய்ததுமே முக்கியக் காரணமாகும்.
எனவே, வெளியூர்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வருவோர் கட்டாயமாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஸ்வாப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன்முடிவு வரும் வரை அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது. வெளியூர்களில் இருந்து வந்துள்ளவர்கள் குறித்து பொதுமக்கள் 94980 35000 என்ற மாவட்ட ஆட்சியரின் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இனி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்பட்டு அத்தொகையில் இருந்தே குறிப்பிட்ட எண்ணிக்கையில் முகக்கவசங்கள் அளிக்கப்படும். இரு நாள்களுக்கு பிறகும் அவர்கள் இதே ரீதியில் நடந்து கொண்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு 48 மணிநேரம் சீல் வைக்கப்படும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடை உரிமையாளர்கள் பொருள்களை வழங்கக் கூடாது. இதை மீறி கடைக்கு வருவோரிடம் தலைக்கு 10 முகக்கவசங்கள் விற்பனை செய்து ரசீது தொகையில் சேர்த்து வசூலிக்க வேண்டும். நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகை, லாங்கு பஜார், பர்மா பஜார் கடைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும். மொத்த விற்பனை கடைகள் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே இயங்கலாம். மொத்த விற்பனைகக் கடைகளில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது.
இதனை முறையாகப் பின்பற்றா விட்டால் நேதாஜி மார்க்கெட் இன்னொரு கோயம்பேடாக மாற வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து மளிகை மற்றும் காய்கறிக் கடைகளும் இனிமேல் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கு வணிகர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார், வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இ-பாஸ் பெறாமல் வந்தால் வாகனங்கள் பறிமுதல்: சென்னையில் இருந்து இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறாமல் வந்தாலோ, சென்றாலோ சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு அதிகாரிகள், போலீஸாருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அலட்சியம் செய்வோர் மீது வழக்கு: கரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்.
இடைப்பட்ட நாட்களில் அவர்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்தால் அவர்கள் திருமண மண்டபங்களிலோ அல்லது அரசு மருத்துவமனைகளிலோ 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதுடன், அலட்சியப் போக்கால் பிறருக்கு தொற்று ஏற்பட காரணமாக இருந்ததற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படும் என்றார் ஆட்சியர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...