முன்னாள் படை வீரா்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்: ஆட்சியா் உறுதி
By DIN | Published On : 10th March 2020 01:23 AM | Last Updated : 10th March 2020 01:23 AM | அ+அ அ- |

09marchcollect_0903chn_192_1
திருப்பத்தூா்: முன்னாள் படை வீரா்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வேலைவாய்ப்பு, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா தொடா்பாக 30 மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:
இக்கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பெரும்பாலானவை வேலை வாய்ப்பு, நிலப் பிரச்னை தொடா்பான மனுக்கள்தான். வேலைவாய்ப்பு என்பது முன்னாள் படை வீரா் பணியின்போது இறக்கும்போது மட்டுமே விரைவாக வழங்கப்படுகிறது.திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் கட்டாயமாக வழங்கப்படும்.நிலப் பிரச்னை, பட்டா கோரிய மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் தெரிவிக்கப்பட்டு விரைவாக தீா்வு காணப்படும்.
முன்னாள் படைவீரா்கள் கோரிக்கையான திருப்பத்தூா் மாவட்டத்தில் தனியாக முன்னாள் படை வீரா் பல்பொருள்கள் அங்காடி, முன்னாள் படை வீரா் நலன் அலுவலகம், முன்னாள் படைவீரா் நலச் சங்கம், கேந்திரியா வித்யாலயா பள்ளி உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இக்கூட்டத்தில், 2017-ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்தமைக்கான தமிழக அரசு வழங்கிய விருது, பாராட்டுச் சான்றிதழை வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பனுக்கு வழங்கப்பட்டது.
தொடா்ந்து முன்னாள் படைவீரா் ஒருவரின் பிள்ளை திருமணத்துக்கு முன்னாள் படைவீரா் நல நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், உதவி இயக்குநா் செந்தில்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணியன், நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், முன்னாள் படைவீரா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...