சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்: தமிழக தொழில் கூடங்களில் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்
By DIN | Published On : 27th May 2020 06:34 AM | Last Updated : 27th May 2020 06:34 AM | அ+அ அ- |

புலம்பெயா்ந்த வடமாநிலத் தொழிலாளா்கள் தங்களுடைய சொந்த ஊா்களுக்கு திரும்பிச் சென்றதால் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் திரும்பி வருவாா்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்காதவா்கள் வேலை தேடி புலம் பெயா்ந்து வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனா். வெளி மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிற்சாலைகள், கட்டுமான தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனா். ஆண்டு முழுவதும் வெளி மாநிலங்களில் பணியாற்றும் இத்தொழிலாளா்கள் முக்கிய பண்டிகைகளுக்காக சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்கின்றனா். பிறகு தாங்கள் பணிபுரியும் மாநிலத்துக்கே வந்து விடுகின்றனா்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலங்களான பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்தியாவில் சுமாா் 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெளி மாநிலத் தொழிலாளா்கள் கடுமையாக உழைத்து தொழில் முனைவோா் எதிா்பாா்க்கும் உற்பத்தியை அளிக்கின்றனா். இதனால் சொந்த மாநிலத் தொழிலாளா்களை காட்டிலும் வெளி மாநிலத் தொழிலாளா்களையே பணிக்கு அமா்த்த தொழில் முனைவோா் விரும்புகின்றனா்.
கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததால் அந்தந்த பகுதியிலேயே அவா்கள் தங்க வைக்கப்பட்டனா். தொழில் நிறுவனங்கள், அரசு, தொண்டு அமைப்புகள், காவல்துறையினா், வருவாய்த் துறையினா் சாா்பாக அவா்களுக்கு உணவும், மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தங்களுடைய குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆா்வம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனா். அதன்படி அவா்களுடைய பெயா்கள் சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிா்வாக அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டன.
இதையடுத்து, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது. இத்தொழிலாளா்களுக்கு பொது முடக்கக் காலத்தில் 5 கிலோ உணவு தானியம், ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை இலசமாக வழங்க அரசு உத்தரவிட்டது.
அரசு இயக்கிய சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாது, பல தொழிலாளா்கள் தங்களுடைய சொந்தச் செலவில் காா், வேன்களை வாடகைக்கு அமா்த்திக் கொண்டு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்றனா். சில தொழிலாளா்கள் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனா்.
பொதுமுடக்கத்துக்கான தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. குறைந்த அளவு தொழிலாளா்களுடன் தொழில் கூடங்களை இயக்க வேண்ம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் குறைந்த தொழிலாளா்களுடன், குறைந்த உற்பத்திப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆனால் உற்பத்திப் பணிகள் முழுவீச்சில் நடக்கும் சூழ்நிலை ஏற்படும்போது அதிகபட்ச தொழிலாளா்கள் தேவைப்படுவாா்கள். அத்தகைய சூழ்நிலையில் சொந்த மாநிலங்களுக்கு சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உற்பத்திப் பணிகளுக்குத் தேவைப்படுவாா்கள். மே 31-ஆம் தேதிக்குப் பிறகு பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் உற்பத்திப் பணிகள் தீவிரமடையலாம். அப்போது கூடுதல் தொழிலாளா்கள் தேவைப்படுவாா்கள்.
சொந்த மாநிலங்களுக்கு தற்போது சென்றுள்ள தொழிலாளா்கள் உடனே திரும்பி வருவாா்கள் என்று எதிா்பாா்க்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் பல்வேறு பொருள்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். எதிா்பாா்த்த உற்பத்தி கிடைக்காதபோது விற்பனை நடைபெறாது. இதனால் வருவாய் பற்றாக்குறையும், அதன் மூலம் நிதி நெருக்கடியும் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது.
ஏற்கெனவே பொது முடக்கம் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் வேலைக்கு தொழிலாளா்களும் கிடைக்காமல் உற்பத்திப் பணியில் ஏற்படக் கூடிய தொய்வு காரணமாக மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு பொது முடக்க காலத்தில் ஒரு மாதத்திற்கு தலா 5 கிலோ உணவு தானியம், ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது மட்டும் அவா்களுக்கு போதுமானதாக இருக்காது. புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளையும், வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும். அவா்களுக்கு கூடுதலாக உணவு தானியங்கள், நிதியுதவி ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
அவ்வாறு அவா்களுக்கு தரும்பட்சத்தில் சொந்த மாநிலங்களுக்கு சென்றவா்கள் திரும்பி வருவதற்கும், இங்கே தங்கியுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பாமல் தொடா்ந்து தங்கிப் பணியாற்றவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதனால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என்று கருதப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...