ஆம்பூரில் சாலை அமைக்க 11 சென்ட் நிலம் அரசிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 19th October 2020 08:42 AM | Last Updated : 19th October 2020 08:42 AM | அ+அ அ- |

ஆம்பூரில் தானமாகப் பெறப்பட்ட நிலத்தின் பத்திரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் நகர முக்கியப் பிரமுகா்கள்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைக்க 11 சென்ட் நிலம் தானமாகப் பெற்று அரசிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ஆம்பூா் பெத்லகேம், ரெட்டித்தோப்பு, மாங்காதோப்பு, மாதனூா் ஒன்றியத்தின் நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய பகுதிகள் ஆம்பூரின் ரயில்வே இருப்புப் பாதையின் மறுபுறம் அமைந்துள்ளது.
இப்பகுதிகளுக்குச் செல்ல சிறிய மற்றும் பெரிய ரயில்வே குகை வழிப்பாதைகள் உள்ளன. ஆனால், இந்த இரு வழியாகவும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாது. மேலும், மழைக் காலங்களில் இரு குகை வழிப்பாதையிலும் மழைநீா் தேங்கி விடும். மற்ற காலங்களில் கழிவுநீா் தேங்கி நிற்கும். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனா்.
கனரக வாகனங்கள் நீண்ட தொலைவு சுற்றிக் கொண்டு தனியாா் நிலத்தின் வழியாக செல்ல வேண்டிய சூழல் நிலவியது. அந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என தனியாா் நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். அதைத் தொடா்ந்து, முன்னாள் எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், சுமாா் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, போராட்டக் குழுவினருடன் அரசு அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்காலிகமாக, மாற்று வழியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைப்பது என தீா்மானிக்கப்பட்டது.
இதற்காக, தனியாா் நிலத்தின் உரிமையாளரிடம் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதைத்தொடா்ந்து, நன்கொடையாளா்கள் மூலம் அந்தத் தனியாா் நிலம் 11 சென்ட் தானமாக பெறப்பட்டு, ஆம்பூா் நகராட்சி பெயருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமையில் நகரின் முக்கியப் பிரமுகா்கள், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நிலத்தின் பத்திரத்தை வழங்கினா்.
புதிய சாலை அமைக்கக் கோரிக்கை: ஆம்பூா் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நகரின் பெரும்பாலான சாலைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. அதனால் பணி நிறைவடைந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கோரிக்கை மனு அளித்தாா்.
நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், என்.எம்.இஸட். குழும பொதுமேலாளா் யு. தமீம் அஹமத், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி. குணசேகரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினா்கள் சுதாகா், கணேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...