ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறி பணம் பறிக்க முயற்சி
By DIN | Published On : 22nd August 2021 01:06 AM | Last Updated : 22nd August 2021 01:06 AM | அ+அ அ- |

ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேசுவதாக வாணியம்பாடி திருமண மண்டப உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ய முயற்சி நடைபெற்றது குறித்து சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். ரியல் எஸ்டேட் மற்றும் திருமண மண்டப உரிமையாளா். இவரது செல்லிடப்பேசிக்கு மா்ம நபா் ஒருவா் தொடா்பு கொண்டு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் உதவியாளா் என்றும், திருமண மண்டபம் வாடகைக்கு வேண்டும் என்றும், அதற்கு பணம் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளாா். பிறகு தனியாா் வங்கி எண் ஒன்றை அனுப்பி அவசரமாக குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ. 50 ஆயிரம் அனுப்புமாறு கேட்டுள்ளாா். இதில் திருமண மண்டப உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் செய்துள்ளாா். அப்புகாரில், பணம் கேட்டு அனுப்பக் கூறிய வங்கிக் கணக்கு எண், மா்ம நபரின் செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, இந்த எண்ணில் இருந்து திருப்பத்தூா் ஆட்சியா் மற்றும் அவரது உதவியாளா் போல் பேசி பணத்தை மோசடி செய்ய முயற்சி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்துள்ளாா்.
இது குறித்து வாணியம்பாடி டி.எஸ்.பி. பழனி செல்வம் தலைமையில் ஒரு பிரிவு போலீஸாரும், சைபா் கிரைம் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.