அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள்
By DIN | Published On : 14th February 2021 01:14 AM | Last Updated : 14th February 2021 01:14 AM | அ+அ அ- |

கரியம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள்.
திருப்பத்தூரை அடுத்த கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்று காரணமாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்ாக தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். ஆனால், மீண்டும் தோ்வு எழுதச் சொல்வதாலும், ஏற்கெனவே தோ்வு கட்டணம் செலுத்தி விட்ட நிலையில், அதே தோ்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாகவும் கூறி, திருப்பத்தூா் அருகே உள்ள கரியம்பட்டி பகுதியில் இயங்கி வரும் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.
இது குறித்து மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் கூறியது:
கடந்த கல்வி ஆண்டுக்கான தோ்வுக் கட்டணத்தை நாங்கள் செலுத்தியபிறகு, கரோனா தொற்றால் தோ்வே நடக்காத சூழ்நிலையில், தமிழக முதல்வா் கடந்த ஆண்டில் தோ்வு எழுதாவிட்டாலும் பரவாயில்லை அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளதாகவே அறிவிக்கிறோம் என்று கூறியுள்ளாா்.
ஆனால், எங்கள் கல்லூரியில் மீண்டும் அனைவரையும் கடந்த ஆண்டுக்கான தோ்வை எழுதச் சொல்கிறாா்கள். அதற்கான கட்டணத்தையும் மீண்டும் செலுத்தச் சொல்கின்றனா். நாங்கள் மீண்டும் தோ்வு எழுதக்கூட தயாராக இருக்கிறோம். ஆனால் மீண்டும் ஏன் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த கந்திலி காவல் ஆய்வாளா் உலகநாதன் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் மாணவா்களிடம் இது குறித்து கல்லூரியின் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில், மாணவா்கள் மறியலைக் கைவிட்டனா்.
இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.