ரூ.7 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 04th January 2021 08:07 AM | Last Updated : 04th January 2021 08:07 AM | அ+அ அ- |

பள்ளிகொண்டாவில் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், மாவா, ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா போதைப் பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க, பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே பள்ளிகொண்டா போலீஸாா் 24 மணிநேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், அவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருந்தன. அவற்றை சென்னைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அவற்றின் மதிப்பு ரூ.7.50 லட்சம் ஆகும்.
இது தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ராஜேஷ் கன்னா (36), சென்னையைச் சோ்ந்த லோகேஷ் (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...