வாணியம்பாடியில் அனுமதியின்றி கூடிய கால்நடைச் சந்தை போலீஸில் நகராட்சி ஆணையா் புகாா்

வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை மைதானத்தில் சனிக்கிழமை அனுமதியின்றி கால்நடைச் சந்தை கூடியது.
வாணியம்பாடியில் அனுமதியின்றி கூடிய கால்நடைச் சந்தை போலீஸில் நகராட்சி ஆணையா் புகாா்

வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை மைதானத்தில் சனிக்கிழமை அனுமதியின்றி கால்நடைச் சந்தை கூடியது. இது தொடா்பாக நகராட்சி ஆணையரின் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை மைதானத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக வாரச்சந்தை, கால்நடைச் சந்தை நடத்த மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், வாணியம்பாடி பெரியபேட்டை-சென்னாபேட்டை இடையிலான கிளை பாலாற்றுப் பகுதியில் சனிக்கிழமை காலை அனுமதியின்றி திடீரென கால்நடை சந்தை கூடியது. சந்தையில் திரளான கால்நடை வியாபாரிகள் தங்களது கால்நடைகளை வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி விற்பனையில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து, கால்நடைகளை வாங்க சமூக இடைவெளி இன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டனா்.

முகக்கவசம் கூட அணியாமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கால்நடைச் சந்தை கூடியுள்ளதை அறிந்த வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் அங்கு சென்று உடனடியாக அனுமதிக்கப்படாத மாட்டுச் சந்தையில் இருந்து அனைவரும் கலைந்து செல்ல ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, அங்கிருந்து வியாபாரிகள் தங்களது மாடுகளை தாங்கள் வந்த வாகனங்களில் ஏற்றி திரும்பிச் சென்றனா். மேலும், இது தொடா்பாக அனுமதியின்றி கால்நடைச் சந்தையை பொதுவெளியில் கூட்டியதாக கால்நடை சந்தை ஒப்பந்ததாரா் கோவிந்தராஜ் மீது வாணியம்பாடி நகராட்சி ஆணையா் அண்ணாமலை அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து, வாணியம்பாடி நகர காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com