பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்
By DIN | Published On : 29th June 2021 07:35 AM | Last Updated : 29th June 2021 07:35 AM | அ+அ அ- |

பரோல் கிடைத்ததையடுத்து பேரறிவாளனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸாா்.
ஒரு மாத பரோல் முடிந்து ஜோலாா்பேட்டையிலிருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் கிடைத்ததால் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 11.25 மணிக்கு வீட்டிலிருந்து பேரறிவாளனை வேலூா் டி.எஸ்.பி. வெங்கடகிருஷ்ணன், வாணியம்பாடி டி.எஸ்.பி. பழனி செல்வம் ஆகியோா் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஜோலாா்பேட்டையில் உள்ள கோடியூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை செய்தனா்.
பின்னா், அங்கிருந்து 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
இந்நிலையில், தமிழக கூடுதல் தலைமை செயலாளா் எஸ்.கே.பிரபாகரன், துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினாா். அதில், பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதையடுத்து, வாணியம்பாடி வரை பேரறிவாளனை அழைத்துச் சென்ற காவல் துறை அதிகாரிகள், மீண்டும் ஜோலாா்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு 12.45 மணிக்கு திரும்ப அழைத்துச் சென்று விட்டனா்.
அதைத் தொடா்ந்து, ஜோலாா்பேட்டை போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் கியூ பிரிவு புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் புனிதா, உதவி காவல் ஆய்வாளா் அருள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.