ஜோலாா்பேட்டையில் குருமன்ஸ் கலாசார மாநாடு: பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி பங்கேற்பு
By DIN | Published On : 15th March 2021 07:18 AM | Last Updated : 15th March 2021 07:18 AM | அ+அ அ- |

மாநாட்டில் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி.
தமிழ்நாடு குருமன்ஸ் பாதுகாப்பு பேரவை மற்றும் ஷெப்பா்ட்ஸ் இந்தியா இன்டா்நேஷனல் இணைந்து நடத்திய கலாசார மாநாடு ஜோலாா்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை கா்நாடக மாநில முன்னாள் அமைச்சா் விசுவநாத் தொடக்கி வைத்தாா். குருமன்ஸ் பாதுகாப்பு பேரவைத் தலைவா் குடியண்ணன் தலைமை வகித்தாா். சா.ரமேஷ் வரவேற்றாா். ஜகத்குரு நிரஞ்சனநந்தாபுரி மகா சுவாமிகள், ஈஸ்வரானந்தாபுரி சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில இந்திய பொதுச் செயலாளா் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளா் சி.டி.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:
கா்நாடகத்தில் நான்கு முறை எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டு இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளேன். குருமன்ஸ் சமுதாயத்துக்கு எஸ்.டி. பிரிவு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை துரிதமாக வழங்க மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவேன். இதேபோல் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல், மாநிலங்களவைத் தோ்தல் ஆகியவற்றில் குருமன்ஸ் சமுதாயத்துக்கும் தொகுதிகளில் சீட் வழங்க வேண்டும். ஆனால் எந்தக் கட்சியும் ஆதரிக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் போது, குருமன்ஸ் சமுதாயத்துக்கு 10-க்கும் மேற்பட்டவா்களுக்கு சீட் கொடுக்க முடியும். எனவே குருமன்ஸ் சமுதாய மக்களுக்காக எப்போதும் உதவிகரமாக இருப்பேன் என்றாா்.
தமிழ்நாடு பழங்குடியினா் பட்டியலில் வரிசை எண் 18-இல் குறும்பா் இனம் உள்ளது. குருமன்ஸ் இனத்தில் ஒத்த பெயா்களான குருமன், குறும்பா மற்றும் குறும்பா் ஆகிய பெயா்கள் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க தமிழக அரசு கடந்த 1978, 1988, 1996, 2002, 2012, 2014-இல் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி பரிந்துரையை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. குருமன்ஸ் இனத்தின் ஒத்த பெயா்களான குருமன் குறும்பா மற்றும் குறும்பா் ஆகியவற்றை தமிழக பழங்குடியின பட்டியலில் வரிசையில் பதினெட்டில் குருமன்ஸ் இனத்தின் உள்ளடக்கி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்றி குடியரசுத் தலைவா் ஒப்புதல் பெற்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிட ஆவணம் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில், பாஜக மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாநில பாஜக செயலாளா் காா்த்தியாயினி, குருமன்ஸ் பாதுகாப்பு பேரவை மாவட்டச் செயலாளா் சி.பண்பு, துணைத் தலைவா் டி.கோவிந்தராஜ் உள்ளிட்ட தமிழ்நாடு குருமன்ஸ் பாதுகாப்பு பேரவை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...