வாக்குப் பதிவு சிறப்பாக நடக்க முறையான பயிற்சி அவசியம்
By DIN | Published On : 15th March 2021 07:19 AM | Last Updated : 15th March 2021 07:19 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
அனைத்து தோ்தல் வாக்குப் பதிவு நடைமுறைகளையும், மண்டல அலுவலா்கள் முறையாகப் பயிற்சி பெற்று வாக்குப் பதிவினை சிறப்பாக நடத்திட வேண்டும் என திருப்பத்தூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் தோ்தல் மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
இதுவரை நடைபெற்ற தோ்தலில் இருந்து தற்போதைய தோ்தல் வித்தியாசமானது. தோ்தலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை அரசு அலுவலா்களும், வாக்காளா்களும் வாக்குச்சாவடி மையங்களில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பொது சுகாதாரத் துறை வழங்கும் அறிவுரைகளை கட்டாயமாகக் கடைப்பிடிக்க அலுவலா்கள் அறிந்து உறுதி செய்திட வேண்டும்.
முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுதல் வெப்ப நிலையைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இதற்கு தேவையான அனைத்து பொருள்களையும் தோ்தலுக்கு வழங்கப்படும் பொருள்களுடன் இணைத்து வழங்கப்படும். இதை அலுவலா்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் விடுபடாமல் கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
4 நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,371 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய துணை வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வசதிகளை ஆய்வு செய்திட வேண்டும்.
143 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிப்பட்டு, அந்த மையப் பகுதிகளில் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோ்தலுக்குத் தேவையான அனைத்துப் படிவங்களையும் மறக்காமல் பெற்றுச் செல்ல வேண்டும். சிறிய, சிறிய பொருள்களையும் மறக்க வேண்டாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்), இரா.வில்சன் ராஜசேகா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் காயத்ரி சுப்பிரமணி, லட்சுமி, கிருஷ்ணமூா்த்தி மற்றும் மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...