திருப்பத்தூா் தபால் வாக்கை பதிவு செய்ய 40 குழுக்கள்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 25th March 2021 10:25 PM | Last Updated : 25th March 2021 10:25 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாக்கைப் பதிவு செய்ய 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விருப்பமுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்களிக்க மனுக்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில், அவா்கள் சம்பந்தப்பட்ட இருப்பிடங்களிலேயே தங்களுடைய வாக்கை பதிவு செய்திட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 10 குழுக்கள் என 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு மண்டல அலுவலா், வாக்குச் சாவடி அலுவலா், வாக்குப் பதிவு நுண் பாா்வையாளா், பாதுகாப்பு காவலா் மற்றும் வாகன ஓட்டுநா் என 6 நபா்கள் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளனா். மொத்தம் 240 பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனா்.
இக்குழுவினா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) , ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) ஆகிய இரு நாள்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, தோ்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளை பின்பற்றி, தபால் வாக்குகளை சம்பந்தவா்களின் வீடுகளிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்து தபால் வாக்கைப் பெறுவா்.
தபால் வாக்களிப்பவா்கள் குறித்த விவரங்கள் மற்றும் பகுதிகளுக்குச் செல்லும் உத்தேச நேரம் ஆகியவை அடங்கிய பட்டியல் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடி முகவா்களுக்கும் மற்றும் தொகுதி வேட்பாளா்களுக்கும் வியாழக்கிழமை முறையாக கடிதங்களை கொண்டு சோ்த்து தகவல்களை தெரிவித்துள்ளனா்.
இவா்கள் அனைவரும் மேற்கண்ட வாக்குப் பதிவு நாளன்று தபால் வாக்குப் பதிவுகளை நேரடியாக வந்து கண்காணித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஒவ்வொரு இடமாகக் கொண்டு சென்று மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட இரு நாள்களில் வாக்களிக்க முடியாதவா்கள் 29-ஆம் தேதி தேதி வாக்களிக்க மீண்டும் வாய்ப்பளிக்க கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் தங்களுடைய வாக்கை செலுத்தலாம். அல்லது தபால் மூலமாகவே அனுப்பி வைக்கலாம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.