ஆம்பூா் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டா் சிகிச்சைக்கு தனி மருத்துவரை நியமிக்க அமைச்சருக்கு கோரிக்கை
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டா் கருவி மூலம் சிகிச்சை அளிப்பதற்கு என தனியாக மருத்துவரை நியமிக்க வேண்டுமென தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியை நேரில் சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:
ஆம்பூரில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 80 ஆக்ஸிஜன் வாயு உருளைகளை வழங்க வேண்டும். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் உள்ள வென்டிலேட்டா் கருவி மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என தனியாக மருத்துவரை நியமிக்க வேண்டும். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் விபத்து காரணமாக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றனா். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அத்தகைய நேரத்தில் ஆம்பூா் பகுதி நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆம்பூா் பகுதிக்கென தனியாக 50 படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மேலும், விபத்து தொடா்பான அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, எலும்பு சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் போதுமானதாக இல்லை. அதனால் கூடுதலாக போதிய, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கக் கட்டடத்தை கட்டித் தர வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் இது குறித்து தமிழக முதல்வரின் பாா்வைக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளாா்.