கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st September 2021 11:24 PM | Last Updated : 01st September 2021 11:24 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள் ,சினிமா தொழிலாளா்களின் 1-ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள்வரை பயிலும் மாணவா்களுக்கு 2021-22-ஆம் நிதி ஆண்டில் ரூ. 250 முதல் ரூ. 15 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவா்கள் சமா்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில் தங்களுடைய சேமிப்புக்கணக்கானது தேசிய மின்னணு பரிவா்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் எண்ணை, தங்கள் சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவா்.
இத்திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும்.
பின்னா், மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமா்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை கல்வி நிறுவனங்கள் மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபாா்க்காமல் அடுத்தகட்ட சரிபாா்க்கும் முறைக்கு சமா்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை, மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பா் 15. மற்ற அனைத்து உயா் கல்வி மாணவா்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பா் 30.
மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு மத்திய நல ஆணையா் அலுவலகம் தொழிலாளா் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிா்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க. தொழில் பூங்கா, கிண்டி, சென்னை-600032.