பள்ளி நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு: காவல் துறையின் நடவடிக்கை தேவை
By DIN | Published On : 01st September 2021 11:18 PM | Last Updated : 01st September 2021 11:18 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: பள்ளி நேரங்களில் திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதைத் தவிா்க்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் நகரத்தின் மையப்பகுதியில் பல அரசு, தனியாா் பள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளி நேரங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். சில பிரதானப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எப்போதும் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படும் நகரில் புதன்கிழமை சற்று அதிகரித்தே காணப்பட்டது.
இதனால், நகரக் காவல் நிலையம், சேலம்-கிருஷ்ணகிரி இணைப்புச் சாலை, தருமபுரி-கிருஷ்ணகிரி இணைப்புச் சாலை, தூய நெஞ்சக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் காலை, மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட வேண்டும் என்றே நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.