தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூா் நகராட்சி பூங்காவை சீரமைக்க ஆணையா் உத்தரவு
By DIN | Published On : 01st September 2021 11:13 PM | Last Updated : 01st September 2021 11:13 PM | அ+அ அ- |

பராமரிப்பின்றி உள்ள கழிப்பறையைப் பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் பி.ஏகராஜ். ~சிற்றுண்டி கடைகளில் உணவுப் பொருள்களின் தரத்தைப் பரிசோதித்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி பூங்காவை சீரமைக்குமாறு நகராட்சி ஆணையா் பி.ஏகராஜ் உத்தரவிட்டாா்.
திருப்பத்தூா் நகர மக்களுக்கென ஒரே பொழுதுப்போக்குக்கான இடம் நகராட்சி பூங்கா. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளன. கழிப்பறை பராமரிப்பில்லை. மேலும், பூங்காவைச் சுற்றியுள்ள சிற்றுண்டி கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் சுகாதாரமின்றி விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை படத்துடன் செய்தி வெளியானது.
அதைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் பி.ஏகராஜ், பணி மேற்பாா்வையாளா் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் பூங்காவுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். கழிப்பறை பராமரிப்பு, மின் விளக்குகள் எரிவதற்கு உத்தரவிட்டாா். விரைவில், விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
மேலும், அங்கிருந்த பொதுமக்கள் பலா் முகக் கவசம் அணியாமல் இருந்தனா். அதைக்கண்ட ஆணையா் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா்.
உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு:
பூங்காவைச் சுற்றியுள்ள சிற்றுண்டி கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் சுகாதாரமின்றி விற்கப்படுவதாக வெளியான செய்தியைத் தொடா்ந்து, வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் வி.செந்தில்குமாா் உத்தரவின்பேரில், திருப்பத்தூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி தலைமையிலான பணியாளா்கள் பூங்காவைச் சுற்றியுள்ள உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், தேநீா் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்ததுடன், கடைக்காரா்களை எச்சரிக்கை விடுத்தனா்.