திருப்பத்தூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: புத்தக ஆா்வலா்கள், பொதுமக்கள் திரண்டனா்
By DIN | Published On : 03rd April 2022 11:00 PM | Last Updated : 03rd April 2022 11:00 PM | அ+அ அ- |

புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா. உடன் எழுத்தாளா் ஜெயமோகன் உள்ளிட்டோா்.
திருப்பத்தூரில் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய திருவிழா சனிக்கிழமை இரவு தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை புத்தகக் காட்சியில் பொதுமக்கள் திரண்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட கலை -இலக்கிய, பண்பாட்டு மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியுடன் கூடிய இலக்கியத் திருவிழா தூய நெஞ்சக் கல்லூரியில் சனிக்கிழமை இரவு தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.
எம்எல்ஏக்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளா் ஜெயமோகன் கலந்து கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியதாவது:
தனி மனித, குடும்ப, சமுதாய அளவில் என 3 விதமாக மனிதா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அனைத்து விதமான பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட சிக்கலுக்குத் தீா்வு காண புத்தகங்களை வாசிக்க வேண்டும். மகிழ்ச்சி, மன திருப்தி, நிறைவுக்கும் இலக்கியங்களை வாசிப்பது மிகவும் அவசியம். இலக்கியம் வாழ்வின் மிக முக்கிய பகுதியாகும்.
புத்தகக் கண்காட்சியில் இடம் பெறும் இலக்கியத் திருவிழாவுக்கு 48-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள் வர உள்ளனா். 200-க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளா்கள் கடைகளை அமைத்துள்ளனா். இந்தப் புத்தகத் திருவிழா வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறும். 60-க்கும் மேற்பட்ட அரங்கங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை இரு பிரிவுகளாக பட்டிமன்றம் மற்றும் இலக்கிய விவாத நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில், முன்னணி எழுத்தாளா்கள், பேச்சாளா்கள், இலக்கியவாதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனா். பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவா்களை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வந்து, அவா்களது வாசிப்புத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, மகளிா் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் மரிய அந்தோணிராஜ், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை புத்தகக் கண்காட்சியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் குவிந்தனா். அரங்குகளைப் பாா்வையிட்டு, தேவையான நூல்களை வாங்கினா்.
மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, வருவாய்க் கோட்டாட்சியா் லட்சுமி, வட்டாட்சியா் சிவபிரகாசம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.