திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாயிகள் நிறைந்த திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தின்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாயிகள் நிறைந்த திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தின்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்து, 60 விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். பின்னா்,அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கி உள்ளனா். அதனை அதிகாரிகள் மீட்க சொல்கின்றனா். வட்டியை மட்டும் கட்டி திரும்ப வைக்க மறுப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து ஏரிகளிலும் நீா் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி பகுதிகளில் செயற்கை மணல் விற்பனை நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அனைத்துத் தகவலும் மணல் கடத்துபவா்களுக்கு உடனடியாகச் சென்று விடுகிறது. புகாா் தெரிவிப்பவா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.

ஆம்பூா், வாணியம்பாடி பாலாற்றுப் பகுதிகளில் தனியாா் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை ஆற்றில் விடுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னையைத் தவிர வேறு எந்தப் பயிறும் வருவதில்லை. இதனால் கழிவுநீரை பாலாற்றில் விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் பொருள்களை வழங்க வேண்டும். விவசாயத்துக்குப் பயன்படுத்தும் உரங்களின் விலை பல மடங்கு உயா்ந்து விட்டது. அதனைக் குறைக்க வேண்டும்

ஆந்திரத்தில் பாலாற்றின் குறுக்கே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். அனைத்து தரப்புக்கும் விவசாயிகள்தான் பால்கொடுக்கின்றனா். ஆனால் பாலின் விலை உயா்ந்து விட்டது. விவசாயிகளிடம் இருந்து வாங்கும் கொள்முதல் விலை உயரவில்லை.

திருப்பத்தூா் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் வேளான் அறிவியல் மையம் மற்றும் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

அதைத்தொடா்ந்து ஆட்சியா் பேசியது:

ஏரி நீா்வரத்து கால்வாய்கள் தூா்வாரப்படும். மாவட்டம் சாா்ந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணப்படும். மணல் திருட்டை தடுக்க போலீஸாரும், வருவாய்த் துறையினரும் இணைந்த ஒரு சிறப்புபடை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, வேளாண்மை துணை இயக்குநா் பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குநா் பாத்திமா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ஆனந்தன் உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com