திருப்பத்தூா் அருகே 16-ஆம் நூற்றாண்டு விஜய நகர கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் அருகே 16-ஆம் நூற்றாண்டு விஜய நகர கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் அருகே அண்ணான்டப்பட்டியில் விஜய நகர காலத்துக் கல்வெட்டு குறித்து தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, ‘காணிநிலம்’ மு.முனிசாமி ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:

திருப்பத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது அண்ணான்டப்பட்டி கிராமம். இந்தக் கல்வெட்டு குறித்து தொன்போஸ்கோ பள்ளித் தமிழாசிரியா் குமரவேல் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம்.

கல்வெட்டானது 3 அடி உயரம் கொண்ட பலகைக் கல்லில் முன்பக்கம் 22 வரிகளும், பின்பக்கம் 13 வரிகளுமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில வரிகள் தேய்ந்துள்ளன.

தமிழகத்தை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விஜய நகர மன்னா் வேங்கடபதி ராயரின் ஆட்சிக் காலத்தில், இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. 1597-ஆம் ஆண்டு கல்வெட்டாகும். தமிழும் கிரந்தமும் கலந்து இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டின் முன்பக்க வாசகம், ‘சுபமஸ்து’ எனத் தொடங்கி, ‘...திருப்பெ..’ என எழுத்துகள் புதைந்துள்ளன. இதேபோல், ‘ம நஞ்சை புஞ்சை முதல...’ என பின்பக்கத்தில் தொடங்கி, ‘கொடுத்த தா்ம்ம சாசநம்’ என்ற வரிகளுக்குப் பின் எழுத்துகள் புதைந்துள்ளன.

வேங்கடபதி ராயரை இந்தக் கல்வெட்டு மகா மண்டலேஸ்வரன், ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வரன் என்று புகழ்கிறது.

இந்தக் கல்வெட்டு எயில் நாட்டில் உள்ள திருப்பெற்றூா் (திருப்பத்தூா்) என்று கூறுகிறது. இங்கு திரு என்பது செல்வ வளத்தைக் குறிப்பதாகும். பெற்றூா் என்பது எல்லா வளமும் பெற்ற ஊா் திருப்பெற்றூா் (திருப்பத்தூா்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது திருப்பத்தூா் தனி மாவட்டமாக உள்ளது. கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து வளமும் பெற்ற ஊராகத் திருப்பத்தூா் இருந்துள்ளது. தொண்டை மண்டலத்தில் 79 நாடுகள் இருந்தன. அதில் ஒரு நாடுதான் எயில்நாடு. எனவே, இந்தக் கல்வெட்டு எயில் நாட்டுத் திருப்பத்தூா் என்கிறது.

திருப்பத்தூா் அண்ணான்டப்பட்டியில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட இந்தக் கோயிலுக்கு நஞ்சை புஞ்சை நிலங்கள் தானமாகத் தரப்பட்ட செய்தியை இந்தக் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

இந்த ஊரில் பழைமையான பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலே இந்தக் கல்வெட்டுக்குரிய கோயிலாகும்.

இன்றைக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, இந்தக் கல்வெட்டுக்கு முப்பூஜை அளித்து, யாதவா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் சிறப்பான விழாவை எடுப்பது கள ஆய்வில் அறிய முடிந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com