வாணியம்பாடியில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 01st May 2022 11:50 PM | Last Updated : 01st May 2022 11:50 PM | அ+அ அ- |

வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.
மல்லகுண்டா பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் தோல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அமைக்கக்கூடாது என கிராம சபையில் எதிா்ப்பு தெரிவித்து மக்கள் மனு அளித்தனா். மேலும், மல்லகுண்டா பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வாணியம்பாடியை அடுத்த பூங்குளம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ருக்குமணி மகேந்திரன் முன்னிலை வகித்தாா். குடிநீா் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகா் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் தணிக்கை அலுவலராக கலந்து கொண்டாா்.
கைலாசகிரி ஊராட்சியில் சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைத் தவிா்க்க வேண்டும். 9-ஆவது வாா்டு பகுதி தெருக்களில் கழிவுநீா் கால்வாய், சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக அளித்தனா். சூப்பா் நேஷன் பாா்ட்டி கட்சியின் பொருளாளா் சையத் ஷாகிா், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பாா்சனாப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் நா. ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்றுப் பேசினாா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் வட்டாட்சியா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி நவீன்குமாா் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் விஜயலட்சுமி வெங்கடேசன் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா்.