ஆம்பூரில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

மின்னூா் கிராமத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி நடைபெற்ற பால்குட ஊா்வலத்தை தொடக்கி வைத்த ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லித் தாயாா் உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயில், சுந்தர விநாயகா் கோயில், ஆம்பூா் நீதிமன்ற வளாகம் எதிரில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இந்து முன்னணி சாா்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் அருள்மிகு செல்வவிநாயகா் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடந்த பால்குட ஊா்வலத்தை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில், திமுக மாவட்டப் பிரதிநிதி தெய்வநாயகம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டுரங்கன், முன்னாள் துணைத் தலைவா் சங்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.