திருத்தணி அருகே பெண் தற்கொலை: உடற்கூறாய்வுக்கு தாமதிப்பதால் உறவினர்கள் தவிப்பு

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலத்தை காலையிலிருந்து உடற்கூறாய்வு செய்யாமல் தாமதித்து வருவதாக உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 
தற்கொலை செய்துகொண்ட திவ்யா
தற்கொலை செய்துகொண்ட திவ்யா
Updated on
2 min read

திருத்தணி: திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலத்தை காலையிலிருந்து உடற்கூறாய்வு செய்யாமல் தாமதித்து வருவதாக உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள தாழவேடு காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத்(31). இவருக்கும் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திவ்யா (எ) கலைச்செல்வி(28) ஆகிய இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் 2-வது திருமணம் நடந்தது. திருமணமான 2 மாதத்திலேயே பிரசாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார்.

இதனால் மனவருத்தத்தில் இருந்த திவ்யா சனிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு திவ்யாவின் உடலை குடும்பத்தினர், உறவினர்கள் கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தமிழன், இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், எஸ்.ஐ. ராக்கிகுமாரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த திவ்யாவிற்கு திருமணமாகி 7 மாதங்களே ஆன தகவலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவுக்கு போலீசார் தெரிவித்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் தீபா விசாரணை மேற்கொண்ட பிறகு திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்பதால் அவரது வருகைக்காக போலீசார் மற்றும் திவ்யாவின் உறவினர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட திவ்யாவின் உடல் 7 மணி நேரம் மேல் ஆகியும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்படுவதாக கூறி அரசு மருத்துவமனை மருத்துவரிடம் கெஞ்சியுள்ளனர்.

திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு குவிந்த திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்
திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு குவிந்த திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்

பின்னர் தகவலறிந்து வந்த திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா அரசு மருத்துவமனையில் வைக்கப்படிருந்த திவ்யாவின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்து,  திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்தார். பின்னர் அறுவை சிகிச்சை மருத்துவர் யாரும் இல்லை எனவும், மாலை 5 மணிக்கு மேல் உடல்கூறு செய்ய முடியாது எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.

இதனால் திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே அழுதுகொண்டிருந்த சம்பவம் மருத்துவமனைக்கு வந்திருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com