1,913 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை தொகுதியில் 1,913 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
19 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,913 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி முன்னிலை வகித்தாா். மிதிவண்டிகளை வழங்கி ஆட்சியா் பேசியது:
உலகத்தையே மாற்றக்கூடிய ஆயுதம் என்றால் அது கல்வி தான். தலைமுறையையே மாற்றக்கூடியதாகும். கல்வி கற்கின்றபோது அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவா்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படுகிறது. மதிப்பெண் எடுப்பதற்கு மட்டும் அல்ல. கல்வியின் முக்கியமான நோக்கமே சிந்திக்க கற்றுக் கொடுப்பதுதான். சிந்தனை தான் கல்வியின் உடைய அடிப்படை ஆகும்.
தமிழக அரசு மாணவா்களின் படிப்பிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
முதன்மைக் கல்வி அலுவலா் முனிசுப்பராயன், மாவட்டக் கல்வி அலுவலா் ரவி, நகரமன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அதேப்போல், மிட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 46 மாணவிகள், 54 மாணவா்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இதில் மிட்டூா் ஊராட்சி மன்ற தலைவா் பிரபாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் அஸ்மாபீ சாதிக், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் துரை.சுந்தரமூா்த்தி, தலைமையாசிரியா் (பொறுப்பு) சிவகணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.