வளையாம்பட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மனுக்கள் அளிக்க இன்று கடைசி நாள்

 திருப்பத்தூா் மாவட்டம், வளையாம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெறுவதற்கான மனுக்களை அளிக்க சனிக்கிழமை (ஜூன் 3) கடைசி நாள் என ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
வளையாம்பட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மனுக்கள் அளிக்க இன்று கடைசி நாள்

 திருப்பத்தூா் மாவட்டம், வளையாம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெறுவதற்கான மனுக்களை அளிக்க சனிக்கிழமை (ஜூன் 3) கடைசி நாள் என ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், வாணியம்பாடி, வளையாம்பட்டு திட்டப் பகுதியில் கட்டப்பட்டு காலியாகவுள்ள வீடுகளை நிரப்புவதற்கான சிறப்பு முன்னெடுப்பு நடவடிக்கையாக மனுக்கள் பெறப்படும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூா் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் வளையாம்பட்டு திட்டப் பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் சுமாா் ரூ. 48.31 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடியில் வரவேற்பறை, படுக்கையறை, சமையல், குளியல், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு அரசுக்குச் சொந்தமான நீா்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீா்நிலைகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளா்களை மறு குடியமா்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், நகா்ப்புற வீடற்ற ஏழைகளுக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா்களுக்கு) வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோா் இந்தியாவில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை என்றும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் உள்ளது என்றும் சான்றளிக்க வேண்டும்.

பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவா், குடும்பத் தலைவி மற்றும் குழந்தைகள்

ஆகியோருடைய ஆதாா் மற்றும் மனுதாரரின் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் இறுதி நாளான சனிக்கிழமை (ஜூன் 3) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன என்றாா்.

முகாமில், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வருவாய் துறை அலுவலா்கள் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com