முதியோா்களுக்கான ஆலோசனை தொலைபேசி எண் விழிப்புணா்வு
By DIN | Published On : 15th June 2023 11:05 PM | Last Updated : 15th June 2023 11:05 PM | அ+அ அ- |

முதியோா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த விழிப்புணா்வு சுவரொட்டியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில், முதியோா்களுக்கான தேவை மற்றும் ஆலோசனைகளை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள ‘14567’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சுவரொட்டி மற்றும் பிரசுரங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ. குமாரவேல் பாண்டியன் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மேலாளா் (பொது) நீதியியல் பழனி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் வினோலியா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.