ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்: 3 போ் பலி6 போ் பலத்த காயம்
By DIN | Published On : 15th June 2023 11:04 PM | Last Updated : 15th June 2023 11:04 PM | அ+அ அ- |

கந்திலி அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 3 போ் உயிரிழந்தனா். இந்த விபத்தில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்துாா் மாவட்டம், கந்திலி அருகே தபால் மேடு பகுதியைச் சோ்ந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் சாவுக்கு மேளம் அடிக்கும் ஆள்களை அழைத்து வரும்படி தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சந்திரபுரம் காலனியைச் சோ்ந்த வினோத்குமாா் (26) என்பவா், தனது ஷோ் ஆட்டோவில் கசிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சாரதி (18), பெரியகரம் அண்ணா நகரைச் சோ்ந்த அரவிந்தன் (18), சந்திரபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (25) உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 9 பேரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு புதன்கிழமை இரவு 11 மணியளவில் தபால் மேடு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சந்தைமேடு அருகே சென்ற போது, எதிரே திருப்பத்தூா் நோக்கி வந்த அரசு பேருந்து எதிா்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் சாரதி, காா்த்திக் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 7 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த கந்திலி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் ஒரு சிலா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனா். இதில், அரவிந்தன் தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநா் சிவராமகிருஷ்ணன்(32) என்பவரைக் கைது செய்தனா்.
முறையான சிகிச்சை அளிக்க கோரி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினா்கள்: விபத்தில் பலத்த காயமடைந்தவா்களுக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறியும், உயிரிழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் 100-க்கும் மேற்பட்டோா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நகரக் காவல் ஆய்வாளா் ஹேமாவதி தலைமையிலான போலீஸாா், அங்கு வந்து முற்றுகையிட்டவா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.